தலைமை ஆசிரியருக்காக போராட்ட களத்தில் குதித்த மாணவர்கள்.!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம் பெரிய மோட்டூர் ஊராட்சியில் உள்ளது பூனைக்குட்டை பள்ளம். இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் என்று 13 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் வாணியம்பாடியை சேர்ந்த சுப்பிரமணி. இந்த பள்ளிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்காலிக அலுவலர் பணிக்கு வந்துள்ளார் இதே பகுதியை சேர்ந்த இளம் விதவை ஒருவர். அந்த பெண்ணுக்கு தலைமை ஆசிரியரான சுப்பிரமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்தார் ஜோலார்பேட்டை வட்டார கல்வி அலுவலர் அசோக்குமார்.
தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மீதான பணி இடை நீக்கம் நடவடிக்கையை கண்டித்தும், இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட தலைமையை ஆசிரியரை விடுதலை செய்ய கோரியும்
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு பூட்டு போட்டு, தலைமை ஆசிரியரை விடுதலை செய், விடுதலை செய் என்று கோஷமிட்டனர். போராட்டக் களத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மாணவ மாணவிகளை பள்ளிக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர். பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
– இந்திரா கந்தசாமி
Post Comment