களம் மாறும் வி.ஐ.பி.க்கள்..! கலக்கத்தில் கட்சி நிர்வாகிகள்.!!

களம் மாறும் வி.ஐ.பி.க்கள்..! கலக்கத்தில் கட்சி நிர்வாகிகள்.!!
SHARE Now

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக முக்கிய அரசியல் கட்சிகள் வாக்கு சாவடிகள் தோறும் பூத் கமிட்டிகள் அமைத்து வருகிறது. இந்த பூத் கமிட்டிகள் முறையாக செயல்பட்டு வருகிறதா என கண்காணிக்க சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தல்களை போல் இல்லாமல், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தல் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு ஒரு சவாலாகவே இருக்கும்…

ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் மற்றும் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என இப்போது அறிவித்து வருகிறது. எதிர்க்கட்சியான
அ.தி.மு.க.வோ மாவட்டங்கள் தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தி வருகிறது.பா.ஜ.க.வோ முறையாக கட்சி அமைப்பு தேர்தல்களை நடத்தி நிர்வாகிகளை அறிவித்து வருகிறது. தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க.வுக்கும் பூத் கமிட்டிகளை விரைவில் அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் தொகுதி மாறி போட்டியிடுவதாக அவ்வப்போது வரும் தகவல்கள் தான் இப்போது பரபரப்புக்கு பந்தி வைத்து உள்ளன. தாங்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என இதுநாள் வரை கனவில் மிதந்த நிர்வாகிகள் இப்போது கலக்கத்தில் உள்ளனர்..


கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொது தேர்தலில் காட்பாடி தொகுதியில் தி.மு.க.பொது செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் போட்டியிட்டார். இந்த காட்பாடி தொகுதியில் இருந்து பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 சட்டமன்ற தேர்தலில் துரைமுருகனை எதிர்த்து, அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிட்டவர் இப்போது அ.தி.மு.க.வில் கழக அமைப்பு செயலாளராக உள்ள கொண்டசமுத்திரம் ராமு. அந்த தேர்தலில் துரைமுருகன் கரை சேருவாரா? மாட்டாரா ? என அவரது கட்சியினரே கதி கலங்கி போயினர்.வெறும் 700 சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ” தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” என வெற்றிக்கோட்டை துரைமுருகன் தொட்டார் என சொல்லலாம். அதனால் இந்த முறை மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடாமல், பாதுகாப்பு கருதி அணைக்கட்டு தொகுதி பக்கம் போய் போட்டியிட உள்ளதாக சில அறிவாலய பட்சிகள் கூறுகின்றன.
இப்போது அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் , வேலூர் மாவட்ட செயலாளராகவும் உள்ள நந்தகுமார் காட்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அந்த ” பட்சிகள்” கூறுகின்றனர்.


அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை தி.மு.க.வேட்பாளர் நந்தகுமாரை எதிர்த்து , அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளரான வேலழகன். தொகுதி மாறி வந்து போட்டியிட்ட நந்தகுமாரை இரண்டு முறை வெற்றி பெற செய்த அணைக்கட்டு தொகுதி மக்கள், சொந்த ஊர்க்காரரான வேலழகனுக்கு தோல்வியையே பரிசாக தந்தனர். இந்தத் தொகுதிக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார் நந்தகுமார்.அதனால் இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற திட்டத்தோடு ,
அமைச்சர் துரைமுருகன் இந்த முறை பாதுகாப்பான தொகுதி என்று அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் கே.வி.குப்பம் ( தனி) தொகுதியில் உள்ள லத்தேரி என்னும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்.ஆனால், இப்போது
காட்பாடி தொகுதியில்தான் மாவட்ட செயலாளர் நந்தகுமார் வீடு உள்ளது. எனவே காட்பாடி தொகுதி அவரது சொந்த தொகுதி ஆகும்.இந்தத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக நந்தகுமார் போட்டியிட்டால், அவரை எதிர்த்து கொண்டசமுத்திரம் ராமு, எஸ்.ஆர்.கே.அப்பு என அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டாலும், தேர்தல் நேரத்தில் கரன்சிகளை வாரியிறைத்து மாவட்ட செயலாளர் நந்தகுமாரே வெற்றி பெறுவார் என கூறுகின்றனர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சட்டமன்ற தொகுதியை குறி வைக்கிறாராம் தே.மு.தி.க.பொது செயலாளரான பிரேமலதா. அதற்கு காரணம் பிரேமலதா பள்ளியில் பயிலும் காலத்தில், அவரது தந்தை கண்ணையா நாயுடு ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாளராக பணியாற்றியவர்.
பிரேமலதாவும் ஆம்பூர் பகுதி பள்ளிகளில் படித்தவர். பிரேமலதாவின் தம்பி எல்.கே.சுதீஷூக்கு இந்த தொகுதியில் ஏராளமான நண்பர்கள் உண்டு.இவர்கள் பூர்வீகமாக கிராமமான செம்பேடு ஆம்பூர் தொகுதியை ஒட்டியே உள்ளது. இந்த ஆம்பூர் தொகுதியில் இந்த முறை தங்கள் கட்சி வேட்பாளராக பிரேமலதா போட்டியிட்டால் கட்டாயம் வெற்றி பெறுவார் என அடித்து கூறுகின்றனர் திருப்பத்தூர் மாவட்ட தே.மு.தி.க.வினர்.

ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள வில்வநாதன் மூன்றாவது முறையாக போட்டியிட உள்ளதாக மாதனூர் மேற்கு ஒன்றிய பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற, நகர மன்ற தேர்தல்களில் இஸ்லாமியர் வாக்கு வங்கியே தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற காரணமாக இருந்தது.அதனால், இந்த முறை தி.மு.க.வேட்பாளராக இஸ்லாமியர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த தலைமை முன் வர வேண்டும் என கூறுகின்றனர்
தி.மு.க.வில் உள்ள இஸ்லாமியர்கள் . அந்த வாய்ப்பை இப்போது ஆம்பூர் நகர மன்ற தலைவராக உள்ள ஏஜாஸ் அகமதுவுக்கு வழங்க வேண்டும் என ஆம்பூரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் மூலம் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


ஆளுங்கட்சியான தி.மு.க பக்கம் உள்ள இஸ்லாமியர் வாக்கு வங்கியை கவர்ந்திழுக்க அ.தி.மு.க.வேட்பாளராக பிரபலமான ஒருவரை நிறுத்த வேண்டும் என கூறுகின்றனர் ஆம்பூர் நகரின் ரத்தத்தின் ரத்தங்கள் சிலர்.கடந்த முறை தி.மு.க.வேட்பாளர் வில்வநாதனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் நஜர் முஹம்மது கட்சியில் சொல்லிக் கொள்ளும்படியான பொறுப்பில் இல்லை அவர்.முறையாக தேர்தல் பணி செய்யவில்லை அதனால்தான் அவர் இந்த தொகுதியில் தோற்றுப் போனார் என மேலும் அவர்கள் கூறுகின்றனர். வாணியம்பாடி தொகுதியை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க.அமைச்சரான
நீலோபர் கபில். இந்த வாணியம்பாடி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அ.தி.மு.க.வை சேர்ந்த செந்தில்குமார். மீண்டும் அவர் இதே வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட வைக்க தலைமை விரும்பும் என்பதால், தொகுதி மாறி ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் எனவும், இஸ்லாமிய வாக்கு வங்கி தனக்கு கைகொடுக்கும் என நம்புகிறாராம் முன்னாள் அமைச்சரான நீலோபர் கபில்.


கடந்த முறை ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே. சி.வீரமணியை தோற்கடித்து காட்டியவர் செக்குமேடு தேவராஜ். இப்போது திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.செயலாளராக உள்ள தேவராஜை தவிர்த்து, இந்த தொகுதியில் யார் அப்போது தி.மு.க.வேட்பாளராக போட்டியிட்டு இருந்தாலும், கே.சி.வீரமணிதான் வெற்றி பெற்று இருப்பார்.பக்கத்து தொகுதியான வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவரான தேவராஜ். சட்டமன்ற பொது தேர்தல் நேரத்தில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கட்சி நிர்வாகிகளை அழைத்து கொண்டு வந்து தேர்தல் பணியாற்ற வைத்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க ஜோலார்பேட்டை தொகுதியில் கரன்சி மழையை பொழிய வைத்து, வெற்றியை தன்வசம் ஆக்கினார் தேவராஜ். வெளியூர்க்காரான தேவராஜை வெற்றி பெற வைத்த ஜோலார்பேட்டை தொகுதி மக்கள், சொந்த தொகுதியை சேர்ந்த கே.சி.வீரமணிக்கு தோல்வியையே பரிசாக தந்தனர்.

ஆனால், இப்போது ஜோலார்பேட்டை தொகுதியில் ஆளுங்கட்சியின் நிலைமை சரியில்லை என்றே சொல்லலாம். ஆம், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் நகர, ஒன்றிய செயலாளர் பொறுப்புகளில் இருந்தவர்கள் இப்போது இல்லை.தி.மு.க.
ஆளுங்கட்சி ஆனதும், நிர்வாகிகள் புதியதாக நியமனம் செய்யப்பட்டார்கள். கட்சியில் இப்போது அங்கு பல்வேறு கோஷ்டிகள் புதியதாக துளிர்விட்டு உள்ளது. உள்ளாட்சி நிர்வாகிகள் ஒருபுறம் ” அட்ராசிட்டி” செய்து வருகின்றனர். இப்படி தொகுதியில் ” தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக வலம் வருகின்றனர்” . இதை எல்லாம் கூட்டிக் கழித்து பார்த்த மாவட்ட செயலாளர் தேவராஜ் இந்த முறை தனது சொந்த தொகுதியான வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடவே அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த முறை தொகுதி மக்களால் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு இந்த முறை ” ரூட் கிளியர்” என்றே சொல்லலாம்..

வேலூர், திருப்பத்தூர் என இரண்டு மாவட்டங்களிலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள் இதுநாள் வரை நினைத்து வந்தனர். அரசியல் கட்சிகளின் முக்கிய பிரபலங்கள் இப்படி தொகுதிகளில் மாறி மாறி போட்டியிடுவதாக வரும் தகவல்களால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

இவர்களை நினைத்தால் இப்படித்தான் பாடத் தோன்றுகிறது
“கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள் ”

– இந்திரா கந்தசாமி…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Post Comment

error: Content is protected !!