ஆந்திராவையும் ஆம்பூரையும் இணைக்கும் சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள்…
ஆந்திராவையும் , ஆம்பூரையும் இணைக்கும் சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள்…
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது குப்பம் சட்டமன்ற தொகுதி. ஆந்திர மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் தொகுதி இது. இந்த குப்பம் தொகுதியில் ராமகுப்பம் மண்டலம் , 89 பெத்தூர் பகுதியில் இருந்து, திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள சுட்டக்குண்டா வரை பழங்காலத்தில் ராணுவ சாலை (Military Road) இருந்து வந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்து வந்த இந்த சாலையை இரு மாநில மக்களும் பயணிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டனர். இதற்கு காரணம் இந்த ராணுவ சாலை அடர்ந்த வனத்தின் வழியாக வருகிறது. இந்த வனப் பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள் அதிகரித்துவிட்டது. இந்த வன விலங்குகள் நடமாட்டத்தின் அச்சத்தின் காரணமாகவே பொதுமக்கள் இந்த பாதையில் பயணிப்பதை தவிர்த்து வந்தனர் என்றே கூறலாம்.
இந்நிலையில் ஆந்திராவின் குப்பம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவே வெற்றி பெற்று வரும் நிலையில், இரு மாநில எல்லைகளை இணைக்கும் ஆந்திர மாநில வனப்பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தூரமும், தமிழக வனப்பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமும் மட்டுமே உள்ள ராணுவ சாலையை புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இரு மாநில மக்கள் மட்டுமல்லாது, கர்நாடகாவின் கே.ஜி.எப், கோலார் , பங்காருபேட்டை பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து போவதற்கும் இந்த ராணுவ சாலை பயனுள்ளதாக இருந்தது. குப்பம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நன்னியாலா சூழல் சுற்றுலா பூங்கா, கும்கி யானைகள் முகாம், குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திராவிடன் பல்கலைக்கழகம், அகஸ்தியா அறிவியல் பூங்கா , குடுபல்லி பகுதியில் அமைந்துள்ள ஈஸ்வரன், சுப்பிரமணியசாமி கோயில்களுக்கு தமிழகப் பகுதியில் இருந்து வந்து போவதற்கும், அதேசமயம் ஆந்திர மற்றும் கர்நாடக மாநில பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆம்பூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம் போன்ற நகரங்களுக்கும், வேலூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்து போவதற்கும் பயணிக்கும் நேரம், பயணிக்கும் தூரம் குறைவாகவே இருக்கும்.
எனவே வனப்பகுதியில் இரு மாநிலங்களை இணைக்கும் இந்த இராணுவ சாலையை புனரமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திர மாநில பகுதியை சேர்ந்தவர்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவும் அதற்கான பணிகளை அப்போது தொடங்கினார்.ஆனால், இடையே ஆந்திர மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின்
ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வரானார். எதிர்க்கட்சித் தலைவரின் தொகுதி என்பதால் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டார் என்றே கூறலாம். மீண்டும் ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு இப்போது இதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கி உள்ளார்.
ராமகுப்பம் மண்டலம், 89 பெத்தூர் முதல் தமிழ்நாட்டின் சுட்டகுண்டா வரை உள்ள இந்த பழைய ராணுவ சாலையை ஆந்திர அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது
குப்பம் வனச்சரகர் ஜெய்சந்தர், உதவி வன பாதுகாவலர் தனஞ்ஜெயடு,
ராமகுப்பம் மண்டல அலுவலர் ரமேஷ் பாபு , மாவட்ட நிர்வாக பொறியாளர் குருவா ரெட்டி, உதவிப்பொறியாளர் மகாதேவ நாயுடு , பெத்தூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார்..
தெலுங்கு தேசம் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் நன்னியாலா மனோகர், பெத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், ஊராட்சி பொறுப்பு செயலாளர் கஜேந்திரா, பெத்தூர் தெலுங்கு தேசம் கட்சி கிளை தலைவர் லோகேஷ், பெத்தூர் கிராம வனக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் இருந்தனர்.
இந்த ராணுவ சாலை அமைப்பதற்கான ஆய்வு 89 பெத்தூர்,பாலாமணி நெட்டு வனத்துறை பார்வை கோபுரம், சிலாமரத்து ஓடை, தொட்டி மடுவு வரை ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆந்திர அதிகாரிகள் கூறுகையில் ” இரு மாநில மக்களின் நலன் கருதி எங்கள் மாநில எல்லை வரை பாதை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டு உள்ளோம். அதற்கான பணிகளை இப்போது துவக்கி உள்ளோம் ” என்றனர்.
– இந்திரா கந்தசாமி
1 comment