திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்றிய செயலாளரை மாற்ற போர்க்கொடி தூக்கிய நிர்வாகிகள்…
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்றிய செயலாளரை மாற்ற போர்க்கொடி தூக்கிய நிர்வாகிகள்…
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளராக இருந்து வந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். காலியாக இருந்த அந்த ஒன்றிய செயலாளர் பதவி தங்களுக்கு வேண்டும் என கந்திலி கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரான டி.டி.சி.சங்கர் என்பவர் கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட அறிவிப்பு அக்கட்சித் தலைமை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு இந்த ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
இந்நிலையில் இன்று (25.12.2024) திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அந்த ஒன்றியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ரகசிய கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் ” நமது ஒன்றியத்தை சேர்ந்த ஒருவரைத்தான் கட்சி தலைமை ஒன்றிய செயலாளராக நியமனம் செய்து இருக்க வேண்டும். அதை விடுத்து , திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த ஒருவரை ஒன்றிய செயலாளராக நியமனம் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நமது ஒன்றிய பகுதிகளை சார்ந்த நிர்வாகிகள் யாரும் அவரை தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த விவகாரம் குறித்து, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் ” என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கூறினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட ஒன்றிய செயலாளருக்கு எதிராக, அந்த கட்சியினரே ரகசிய கூட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
– இந்திரா கந்தசாமி..
Post Comment