பெண்களுக்கான பொது கழிப்பறையை சொந்த செலவில் கட்டி கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர்…!
திருப்பத்தூர் மாவட்டம் , மாதனூர் ஒன்றியம், பெரியவரிகம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சி. சின்னக்கண்ணன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரியவரிகம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் இந்த ஊராட்சி பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஊராட்சியில் சிறந்த சமூக சேவை ஆற்றியதற்காக பல்வேறு அமைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த பெரியவரிகம் ஊராட்சியில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊராட்சி பகுதியில் வாழும் பெண்களின் நலன் கருதி , பெண்களுக்கான பிரத்யேக கழிப்பறையை கட்ட வேண்டும் என்பது அப்பகுதி பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவரிடம் அவ்வப்போது எடுத்துக் கூறியும் வந்துள்ளனர்.
இந்நிலையில் நவீன வசதியுடன் கூடிய பெண்களுக்கான பொது கழிப்பறையை இப்போது ஊராட்சி மன்ற தலைவர் சின்னக்கண்ணன் கட்டி முடித்து உள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனது சொந்த செலவில் பெண்களுக்கான பொது கழிப்பறை கட்டி கொடுத்து உள்ளது பெரியவரிகம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
– இந்திரா கந்தசாமி ….
Post Comment