ஆம்பூர் ஆந்திராவை இணைக்கும் சாலைக்கு ஆந்திர முதல்வரிடம் கோரிக்கை..!
ஆம்பூர் அருகே உள்ள சுட்டக்குண்டா முதல் ஆந்திராவின் 89 பெத்தூர் வரை வனப்பகுதியில் உள்ள பழைய இராணுவ சாலையை புனரமைக்க கோரி , ஆந்திர மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவிடம் தெலுங்கு தேசம் பிரமுகர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் வட்டம், மாதனூர் ஒன்றியத்தில் உள்ளது அரங்கல்துருகம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள சுட்டக்குண்டா முதல் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் , ராமகுப்பம் மண்டலம் 89 பெத்தூர் வரை வனப்பகுதியில் பழைய இராணுவ சாலை உள்ளது. இந்த ராணுவ சாலையை புதுப்பிக்க கோரி தமிழக – ஆந்திர மாநில பகுதிகளை சேர்ந்தவர்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்தனர்.கடந்த 2018 அதற்கான பூர் வாங்கப் பணிகள் துவங்கின. ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக பழைய ராணுவ சாலை புனரமைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது மீண்டும் ஆந்திராவில் தெலுகு தேசம் கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. ஆந்திர மாநில முதல்வராக உள்ள என். சந்திரபாபு நாயுடுவின் தொகுதியில் உள்ளது இந்த 89 பெத்தூர் ஊராட்சி. எனவே இந்த பழைய ராணுவ சாலையை புனரமைக்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஆர்வம் காட்டுகிறார்.
இந்நிலையில் இன்று ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் குப்பம் தொகுதி தெலுங்கு தேசம் கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர் கண்ட்ரலா ஸ்ரீகாந்த், மண்டல பொறுப்பாளர் நன்னியாலா மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது ராணுவ சாலையை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை வேண்டும் என்றும், இதனால் குப்பம் பகுதியில் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடையும் என்றும் எடுத்துக் கூறினர்.
கௌண்டன்யா வன விலங்குகள் சரணாலய காப்பு காடுகள் பகுதியில் உள்ள இந்த பழைய ராணுவ சாலை புனரமைக்கப்பட்டால், திராவிடன் பல்கலைக்கழகம், குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அகஸ்தியா அறிவியல் பூங்கா, குடுபல்லி சுப்பிரமணிய சுவாமி கோயில், மல்லப்ப சுவாமி தேவஸ்தானம் , விரைவில் குப்பம் பகுதியில் அமைய உள்ள விமான நிலையம் போன்ற புகழ்பெற்ற இடங்களுக்கு தமிழக பகுதிகளில் இருந்து வந்து செல்வோருக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஆந்திரா அரசாங்கம் இதில் அதீத அக்கறை காட்டுவதாக தெரிகிறது.
– இந்திரா கந்தசாமி
Post Comment